லாகூர், ‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட தாக்குதல், திட்டமிட்ட சதி’ என, கூட்டு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 70, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து, தலைநகர் இஸ்லாமாபாத் வரை, கடந்த நவம்பரில் பேரணி நடத்த திட்டமிட்டார்.
இதில் பங்கேற்க, இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா என்ற இடத்துக்கு வந்தார்.
அங்கு திரண்டிருந்த அவரது தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேச, ஒரு கன்டெய்னர் லாரி மீது ஏறினார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் இம்ரானை சுட்டார். இதில், இம்ரானின் வலது காலில் குண்டு பாய்ந்தது. இன்னொரு நபரும் தொடர்ந்து சுட்டதில் தொண்டர்களில் ஒருவர் உயிரிழந்தார்; 14 பேர் காயம் அடைந்தனர்.
லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இம்ரான், தற்போது, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அரசு சார்பில் கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் அறிக்கை குறித்து, பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் உமர் சர்ப்ராஸ் சீமா கூறியதாவது:
இம்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல், திட்டமிடப்பட்ட சதி என்பது கூட்டு விசாரணைக் குழு வாயிலாக தெரிய வந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்ட முஹமது வக்காஸ், நவீத் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இதில், நவீத் பயிற்சி பெற்ற கொலையாளி; இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ‘பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மற்றும் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தலைவர் மேஜர் ஜெனரல் பைசல் நசீர் ஆகிய மூவரும் தான் என்னைக் கொல்ல சதி செய்தனர்’ என, இம்ரான் கான் குற்றஞ்சாட்டியிருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்