புபனேஸ்வர்: ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபரும் மக்கள் பிரதிநிதியுமான பவெல் ஆன்டோவ், ஒடிசாவுக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ரஷ்யாவின் விளாடிமிர் மகாண மக்கள் பிரதிநிதிகளான விளாடிமிர் புதானோவ், பவெல் ஆன்டொனோவ் உள்ளிட்ட 4 பேர் கடந்த வாரம் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் ஒடிசாவில் ராயகடா என்ற பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் அறைகள் எடுத்து தங்கி உள்ளனர். கந்தமால் மாவட்டத்தில் உள்ள தரிங்பாடி என்ற இடத்திற்கு கடந்த 21-ம் தேதி சுற்றுலா சென்றுவிட்டு பிறகு அறைக்கு திரும்பி உள்ளனர். மறுநாள் காலை விளாடிமிர் புதானோவ் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பவெல் ஆன்டொனோவ் நேற்று முன்தினம் (டிச. 25) தான் தங்கி இருந்த 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் பவெல் ஆன்டொனோவின் உடல் நேற்று எரியூட்டப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த ஷர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியது: “விளாடிமிர் புதானோவ், பவெல் ஆன்டொனோவ் உள்ளிட்ட 4 பேர் ராயகடாவில் உள்ள ஓட்டலில் கடந்த 21-ம் தேதி அறை எடுத்து தங்கி உள்ளனர். மறுநாள் விளாடிமிர் புதானோவ் உயிரிழந்தார். அவருக்கு வயது 61. அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அறிவித்தனர். இதையடுத்து அவரது உடல் எரியூட்டப்பட்டது. இதையடுத்து, அவரது நண்பரான பவெல் ஆனடொனோவ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 65” எனத் தெரிவித்தார்.
ரஷ்யாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராகவும், நன்கொடையாளராகவும் பவெல் ஆன்டொனோவ் இருந்துள்ளார். தனது 65-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நோக்கில் அவர் இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், இங்கு மர்மமான முறையில் அவர் உயிரிழந்தார். ரஷ்யாவில் இருந்து வந்து ஒரே ஓட்டலில் தங்கிய மக்கள் பிரதிநிதிகள் இருவர் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது சர்ச்சைக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது.