நாக்பூர்: கர்நாடகாவில் உள்ள 865 கிராமங்கள் மகாராஷ்டிராவுக்குச் சொந்தம் என்றும், அவற்றை சட்டப்படி மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்கும் என்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள பெல்காம், கார்வார், பிதார், நிபானி, பால்கி உள்பட 865 கிராமங்கள் மகாராஷ்டிராவுக்குச் சொந்தம் என அம்மாநில அரசு உரிமை கோரி வருகிறது. இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மகாராஷ்டிராவின் இந்த உரிமை கோரலை அடுத்து, பெல்காமில் சட்டப்பேரவை வளாகத்தைக் கட்டியது கர்நாடகா. தற்போது அங்கு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
எல்லைப் பிரச்சினையில் மாநிலத்தின் நலன் காக்கப்படும் என கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், நாக்பூரில் நடைபெற்று வரும் மகாராஷ்டிர சட்டப்பேரவையில், கர்நாடகாவின் கட்டுப்பாட்டில் உள்ள மராத்தி பேசும் மக்கள் வாழும் 865 கிராமங்களை சட்டப்படி மீட்க மாநில அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது. எல்லைப் பிரச்சினை குறித்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு சட்டபூர்வ தீர்வு காணப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.