கோவை: கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி கார் வெடித்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் (29) உடல் கருகி பலியானார். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடி பொருட்கள் வாங்கியது, சதி திட்டத்திற்கு உதவியது என ஜமேஷா முபினின் கூட்டாளிகளான உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த முகமது அசாருதீன் (25), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (28), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் (24) ஆகிய 6 பேரை சட்ட விரோத செயல்பாடுகளுக்காக உபா சட்ட பிரிவில் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை என்ஐஏ போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. கைதானவர்களில் பெரோஷ்கான், உமர் பாரூக், முகம்மது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகள், கோவையில் உள்ள அவர்கள் வீட்டுகளுக்கு சென்று பல்வேறு ஆதாரங்களை கேட்டு துருவி துருவி விசாரித்தனர். இந்நிலையில், நேற்று 2வது நாளாக உக்கடம் அடுத்த அன்பு நகர் 2வது வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு என்ஐஏ அதிகாரிகள் 5 பேரையும் அழைத்து சென்று விசாரித்தனர். வருகிற 29ம் தேதி வரை 5 பேரின் காவல் விசாரணை உள்ள நிலையில், கோவையில் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.