சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பொதுச் செயலாளர் வழக்கு குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (டிச.27) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இக் கூட்டத்தில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள அதிமுக பொது செயலாளர் தொடர்பான வழக்கு, ஜனவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்காதது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.