சோழி முடிஞ்சுது… போய் வேலைய பார்க்கலாம்… மழைக்கு குட்பை சொன்ன வெதர்மேன்!

நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லை என்றே தெரிகிறது. இரண்டு கட்டங்களாக வெளுத்து வாங்கிய மழையை சமாளிக்க சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிதாக மழைநீர் தேங்காத நிலையை பார்க்க முடிந்தது. இதற்கு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி செய்திருந்த ஏற்பாடுகள் முக்கிய காரணம் ஆகும்.

ஒரே ஒரு புயல் மட்டும் தான்

குறிப்பாக டிசம்பர் மாதம் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் எனக் கூறப்படும் நிலையில் மாண்டஸ் புயல் மட்டும் சற்று ஆட்டம் காட்டியது. அதுவும் மகாபலிபுரம் அருகே கரையை கடந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் சென்றுவிட்டது. அதேசமயம் சேதமடைந்த பொதுமக்களுக்கு போதிய மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று அரசு தரப்பு உறுதி அளித்திருந்தது.

குட்பை சொன்ன பருவமழை

இந்நிலையில் 2022ஆம் ஆண்டின் இறுதியை எட்டிவிட்டோம். பனியும் படிப்படியாக அதிகரித்த வண்ணம் செல்கிறது. வழக்கமாக பனி வந்தால் மழை இருக்காது என்று சொல்லப்படுவது உண்டு. அந்த வகையில் மழை எட்டி பார்க்கவில்லை. வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது மழை குறித்த அப்டேட் கொடுத்த வண்ணம் இருக்கிறது. ஆனால் களநிலவரம் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

ஹாட்ரிக் மிஸ் பண்ண சென்னை

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ட்வீட் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது, சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 1,000 மில்லிமீட்டர் அளவை தாண்டி 200 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்தோம். 960 மில்லிமீட்டரை தொட்டு விட்டது.

தென் தமிழகத்தில் நல்ல மழை

ஆனால் அதன்பிறகு மழை அப்படியே புஸ்ஸானது. இனிமேல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரிதாக மழை இருக்காது. தூத்துக்குடி மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக மழையை எதிர்பார்க்கலாம்.

ஜனவரியில் ’நோ’ மழை

வட தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வேண்டுமென்றால் இப்படி சொல்லவிடலாம். பருவமழை முடிவுக்கு வந்துவிட்டது என்று. லா நினா நிகழ்வு படிப்படியாக குறைந்து கொண்டே வருவதால் ஜனவரி மாதத்தில் மழைக்கான வாய்ப்புகள் பெரிதும் குறைவு தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31ஆம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.