புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஜெய்சால்மர் நகரில் இருந்து தனியார் நிறுவன விமானம் ஒன்று வந்து இறங்கியுள்ளது.
அந்த விமானத்தின் சீட்டின் இருக்கையில் பின்புறம் துணி மீது இந்தியில், இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்ற பொருள்பட தகவல் எழுதப்பட்டு இருந்துள்ளது. இதனை கவனித்த பயணி ஒருவர் மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். உடனடியாக ஸ்பைஸ்ஜெட் தனியார் விமான நிறுவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதன்பின், விமானம் தனியான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
டெல்லி போலீசார் மற்றும் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் விமானம் முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஏறக்குறைய 2 மணி நேரம், இந்த பணியில் அவர்கள் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால், அந்த விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் அது வெறும் புரளி என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் செய்தியை எழுதிய நபர் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.