உலகம் முழுவதும் உருமாறிய பி.எப் 7 வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் பி.எப் 7 வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழக அரசு கொரோனா பரவலை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகத்தில் புத்தாண்டு, சமய விழா மற்றும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. எனினும் பொதுமக்கள் அனைவரும் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.