மதுரை: அகில இந்திய இறகுப்பந்து போட்டியில் தங்கம் வென்ற மதுரை திருப்பரங்குன்றம் பெண் காவல் ஆய்வாளர் ஹேமாமாலாவுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
கடந்த 2019 ஆண்டுக்கான அனைத்து இந்திய சீருடைய பணியாளர்களுக்கான (காவலர்கள்) இடையேயான இறகுப்பந்து போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 2020 பிப்ரவரியில் நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 40-க்கும் அணிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு காவல் துறை அணியில் பெண்கள் பிரிவில் மதுரை திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் ஹேமாமாலா கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.
தனிநபர் பிரிவில் அவர் தங்கம் வென்று, தமிழ்நாடு காவல் துறை இறகு பந்து அணிக்கு பெருமை சேர்த்தார். இவரது திறமையை பாராட்டும் வகையிலும், மேமம்படுத்தும் விதமாகவும் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இத்தொகையை சென்னையில் தமிழக காவல்துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு, காவல் ஆய்வாளிடம் வழங்கினார்.
ஆய்வாளர் ஹேமாமாலா கூறுகையில், ”சிறு வயதில் இருந்தே இறகுப் பந்து விளையாடுவதில் ஆர்வம். டிஜிபி சைலேந்திரபாபு திண்டுக்கல்லில் எஸ்பியாக இருக்கும்போது அவரிடம் பரிசு பெற்று இருக்கிறேன். தற்போது, அவரது கையால் பரிசு பெறுவது மகிழ்ச்சி யாக இருக்கிறது. ஏற்கெனவே மாநில அளவிலான போட்டிகளில் 4 தங்கப் பதக்கம் வாங்கி இருந்தாலும், முதல்முறையாக இந்த ரொக்க பரிசு பெறுகிறேன். எனது விளையாட்டு திறமையை மேம்படுத்தும் விதமாக இப்பரிசை வழங்கிய அரசுக்கும், தமிழக காவல் துறைக்கும் நன்றி” என்றார்.