தேவியாக்குறிச்சி அருகே வேன் கவிழ்ந்து விபத்து… கோவை பக்தர்கள் பலர் படுகாயம்!

கோவை மாவட்டம் சூலூர் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து உரிய ஏற்பாடுகளுடன் டிராவல்ஸ் ஒன்றின் மூலம் வேன் முன்பதிவு செய்தனர். தங்களது வேண்டுதல்கள் நல்ல முறையில் நிறைவேற வேண்டும் என்றும், பத்திரமாக சென்று வீடு திரும்ப வேண்டும் என்றும் வேண்டியபடி வேன் கிளம்பியது.

வேன் கவிழ்ந்து விபத்து

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தேவியாக்குறிச்சி அருகே வேன் வந்தது. அங்குள்ள தனியார் பள்ளியை தாண்டியதும் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் குமார் உள்ளிட்ட 25 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவருக்கும் ரத்தம் வழிந்ததை பார்க்க முடிந்தது.

ஓடிவந்து காப்பாற்றிய பொதுமக்கள்

வேன் விபத்தில் சிக்கியதை கண்ட அப்பகுதி மக்கள் உடனே ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதிக அளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டவர்களுக்கு துணியை வைத்து ரத்தம் வராமல் பார்த்துக் கொண்டனர். 108 ஆம்புலன்ஸ் வந்ததும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் அனுமதி

பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து வந்த தலைவாசல் போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கவிழ்ந்த வேனை தூக்கி நிறுத்தும் வேலைகள் மறுபுறம் நடந்து கொண்டிருக்கின்றன.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களும் பலர் திரண்டதால் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது. அனைவரையும் ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

பெரும் விபத்து தவிர்ப்பு

தேவியாக்குறிச்சி பகுதியில் நான்கு வழிச்சாலை இருக்கிறது. இது சென்னை – சேலம் நெடுஞ்சாலை என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில் இருந்து சேலம் வந்தால் இந்த வழித்தடத்தில் தான் ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை செல்ல முடியும். எனவே தான் மேல்மருவத்தூர் செல்வதற்கு இந்த வழித்தடத்தை பயன்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக தேவியாக்குறிச்சி பிரதான சாலையை ஒட்டி சிறிய அளவிலான பள்ளம் ஒன்று தொடர்ச்சியாக செல்கிறது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், இந்த பள்ளத்தில் தான் கவிழ்ந்திருக்கிறது. பெரிய அளவில் பள்ளம் இல்லாததால் மோசமான விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.