நடை திறக்கப்பட்டு 39 நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 29 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்: ரூ.223 கோடி வருமானம்.!

பம்பை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை 29 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருவனந்தபுரம், நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சீசனில் வரலாறு காணாத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. இந்தநிலையில் சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடக்கிறது. இதனையொட்டி நேற்று மாலையில் அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதற்கிடையே நேற்று சன்னிதானம் விருந்தினர் மாளிகையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு 39 நாட்களில் (நேற்றுமுன்தினம் வரை) சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ரூ.222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 வருமானம் கிடைத்துள்ளது. இதில் காணிக்கையாக ரூ.70 கோடியே 10 லட்சத்து 81 ஆயிரத்து 986 வசூலானது. மேலும் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் குழந்தைகள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.