கொச்சி,
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த 23-ம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 80 வீரர்கள் ரூ. 167 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இதில், 4 வீரர்கள் 16 கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இந்த மினி ஏலத்தில் எதிர்பாராத திருப்பங்களும் அரங்கேறியது. அதிக விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் சொற்ப விலைக்கும் சில வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படாமலும் சென்ற நிகழ்வும் அரங்கேறியது.
இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மாவை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இது தொடர்பாக அவரது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் தன்னை எடுக்காதது குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்தீப் சர்மா, நான் மிகவும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தேன். என்னை யாரும் ஏன் ஏலத்தில் எடுக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. எந்த அணிக்கு விளையாடினாலும் நான் சிறப்பாக விளையாடினேன். சில அணிகள் என்னை ஏலத்தில் எடுக்க முயற்சிப்பார்கள் என்று நினைத்தேன்… உண்மையை கூறவேண்டுமானால் நான் இதை எதிர்பார்க்கவில்லை. எங்கு தவறு நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் நான் சிறப்பாக விளையாடியுள்ளேன். ரஞ்சி கோப்பை இறுதி சுற்றில் நான் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினேன். சையது முஸ்டக் அலி கோப்பையிலும் நான் சிறப்பாக செயல்பட்டுள்ளேன்’ என்றார்.