நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

கராச்சி,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நேற்று தொடங்கியது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த பாகிஸ்தானுக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் (7 ரன்),ஷான் மசூத் (3 ரன்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். தொடர்ந்து இமாம் உல்-ஹக்கும் (24 ரன்), சாத் ஷகீலும் (22 ரன்) நடையை கட்டினர்.

இதற்கிடையே, கேப்டன் பாபர் அசாம் வலுவாக காலூன்றி துரிதமான ரன்வேட்டையில் ஈடுபட்டார். அவருக்கு விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது நன்கு ஒத்துழைப்பு கொடுக்க பாகிஸ்தானின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.அபாரமாக ஆடிய பாபர் அசாம் தனது 9-வது சதத்தை நிறைவு செய்தார்.சர்ப்ராஸ் அகமதுவும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி கட்டத்தில் சர்ப்ராஸ் 86 ரன்களில் (153 பந்து, 9 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்தது. பாபர் அசாம் 161 ரன்களுடனும் (277 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), அஹா சல்மான் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் பாபர் அசாம் 161 ரன்களில் வெளியேறினார்.மறுபுறம் சிறப்பாக விளையாடிய அஹா சல்மான் சதம் அடித்து அசத்தினார்.தொடர்ந்து ஆடிய அவர் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை இழந்து 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுதி 3 விக்கெட்டும் , அஜாஸ் படேல் , பிரேஸ்வெல் , இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட் , நெயில் வாக்னெர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர் .

தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.