களியக்காவிளை: விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியின் 177 வது ஆண்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார். கலெக்டர் அரவிந்த், எஸ்.பி ஹரிகிரண்பிரசாத் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசுகையில், நான் இந்த பள்ளியில் 11 ஆண்டுகள் கல்வி பயின்றேன்.
கல்வி மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறையிலும் என்னைப்போன்ற நூற்றுக்கணக்கான சாதனையாளர்களை உருவாக்கியது இந்த பள்ளிக்கூடம். பள்ளி வளாகத்தில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன். நான் இந்த பள்ளியில் படிக்கும் போது, 1500 மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். ஆனால் தற்போது 500 மாணவர்கள் மட்டுமே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது, என்றார்.
* அரசு பள்ளி மாணவர்கள் உயர்வு அடைவார்கள்
விழாவுக்கு முன் டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புச்சேரி பகுதிகளில் முக்கியமான 16 செக்போஸ்ட்களில் நவீன கேமராக்கள் பொருத்தி தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறோம். இவற்றின் மூலம் கடத்தல் சம்பவங்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இனி கேரளாவில் இருந்து எந்த கழிவுகளும் குமரி மாவட்டம் வழியாக கொண்டுவராதவாறு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசு தற்போது அரசு பள்ளிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் ஆண்டுகளில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஐஏஎஸ் போன்ற உயர்ந்த நிலையை அடையும் வகையில், தற்போது அரசு பள்ளிகள் தரம் உயர்ந்து வருகின்றன, என்றார்.