புதுடெல்லி: BF.7 உருமாறிய கொரோனா வைரஸ் உலகில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் தொற்று பாதிப்புகள் சில உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த வாரம் இந்தியாவின் கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தில் சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசிவழி தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால், நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறையை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் பெற்றுள்ளது. நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸாக இதனை பயன்படுத்தப்பட உள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளில், ரூ.800 என்ற விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் ரூ.325-க்கு இந்த தடுப்பூசி விற்பனை செய்யப்படும். வருகிற ஜனவரி நான்காவது வாரத்தில் இருந்து இந்த இன்கோவேக் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். இதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளலாம். கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்களும், பூஸ்டர் டோஸாக நாசி வழியேயான இந்த iNCOVACC தடுப்பூசியை எடுத்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடுமாறு அனைவரையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அதிகரித்து வரும் கோவிட் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கவனமுடன் இருக்குமாறு எச்சரித்துள்ளார், மேலும் அனைவரையும் முழுமையாக தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக எளிதில் தொற்று பாதிக்கப்படக்கூடியவர்கள் மிகவும் எச்சரிக்கையிடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். மாஸ்குகளை அணிவது மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட கோவிட் வழிமுறைகளை தீவிரமாக பின்பற்றவும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.