புதிய இலங்கைத் தூதுவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு…

புதிய இலங்கைத் தூதுவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு…

முதலீட்டு ஈர்ப்பு, ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் புதிய இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்து….

பாரம்பரிய இராஜதந்திர முறைக்குப் பதிலாக பொருளாதார இராஜதந்திரத்திற்கு உலகம் முன்னுரிமை அளித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையின் புதிய தூதுவர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் இடையில்  (டிசம்பர் 26) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் 16 புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் கலந்துகொண்டனர்.

முதலீட்டை ஈர்ப்பதற்கும், ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், அனைவருடனும் நட்புறவான, நடுநிலையான அணிசேரா நாடு என்ற நற்பெயரை மேம்படுத்தும் நோக்குடன் செயற்பட வேண்டும் என புதிய தூதுவர்களிடம் பிரதமர் கூறினார்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர், உதவிகள் மற்றும் கடனின் மீது தங்கியிருப்பதைப் பார்க்கிலும் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் துரித அபிவிருத்தியை அடைந்துகொள்ளக் கூடிய வகையில் முதலீடுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு கூட்டாண்மைக்காக உழைக்குமாறு இலங்கை தூதுவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதிக முதலீடு, வேலை வாய்ப்புகள் மற்றும் அபிவிருத்தி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களது சங்கங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும். விரைவான பொருளாதார மீட்சியை அடைந்து, விவசாயம், கைத்தொழில், தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும், உணவில் தன்னிறைவு அடைவதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு நட்பு நாடுகள் ஒத்துழைக்க முடியும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் தாபிக்கப்பட்ட முதலீட்டு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுக்களுக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் முன்னாள் வெளிவிவகார செயலாளர்களான சித்ராங்கனி வாகீஸ்வர (அவுஸ்திரேலியா) மற்றும் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொழம்பகே (இந்தோனேசியா) மற்றும் மனிஷா குணசேகர (பிரான்ஸ்), எச்.எம்.ஜி.ஆர்.ஆர்.கே. மெண்டிஸ் (பஹ்ரைன்), கலாநிதி ஏ.எஸ்.யு. மெண்டிஸ் (வியட்நாம்), வருணி முத்துக்குமாரண (ஜெர்மனி), கபில ஜயவீர (லெபனான்), எம்.எச்.எம்.என். பண்டார (இஸ்ரேல்), கே.கே.தெஷாந்த குமாரசிறி (எத்தியோப்பியா), கலாநிதி சானக எச்.தல்பஹேவா (பிலிப்பைன்ஸ்), பிரியங்கிகா விஜேகுணசேகர (ஜோர்தான்), பி.காண்டீபன் (குவைத்), ஹிமாலி அருணதிலக்க (ஜெனீவா), உதய இந்திரரத்ன (ஐக்கிய அரபு இராச்சியம்) மற்றும் சந்தி சமரசிங்க (மெல்பர்ன்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

PM MEDIA

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.