புதிய வகை கொரோனா தொற்று உருவாகி உள்ளதால் கோரிமேட்டில் அரசு மார்பு நோய் மருத்துமனையில் கொரோனா வார்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியரும் சுகாதார துறை செயலருமான வல்லவன் நேரில் ஆய்வு செய்தார். கொரோனா சிகிச்சை பிரிவு மற்றும் ஏற்பாடுகள் குறித்து சுகாதார இயக்குனர் ஸ்ரீராமலு மற்றும் அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வல்லவன், ‘கடந்த முறை கொரோனாவின் போது சுகாதாரத்துறை அதிகமாக சிறப்பாக செயல்பட்டு அதிகம் உயிரிழப்பை தடுத்தது. சற்று இடைவெளிக்கு பிறகு புதிய ரக பி எம் 7 கொரோனா பரவு வருவதாக அறிய வந்துள்ளது. இந்த கொரோனா சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் தடுப்ப நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனை எதிர்கொள்ள அனைத்து ஆயத்து நடவடிக்கைகளும் புதுச்சேரி அரசு எடுத்துள்ளது. காசநோய் மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளில் 450 படுக்கைகள் தயாராக உள்ளன.
இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு போதிய ஆக்சிஜன் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த ஆக்சிஜன் பிளான்ட் வைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் சூழலில் 250 ஆக்சிஜன் கான்செப்டர்களும் மூச்சு திணறல் போது சிகிச்சை அளிக்க 2000 நெபுலைசர்களும் 125 வென்டி லட்டர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நோய் தொற்று அதிகமானால் தனியார் மருத்துவமனையில் வசதிகளும் பயன்படுத்தப்படும். மருத்துவ பரிசோதனைகளும் அதிகப்படுத்தப்படும்.
கொரோனா நோயை கண்டறியும் ஜெனோ டெஸ்ட் எடுப்பதற்கான பரிசோதனைகள் பெங்களூர் அனுப்பப்பட்டது. தற்போது புதுச்சேரியில் இந்த வசதி நிறுவப்பட்டுள்ளது. அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து உள்ளதால் மக்கள் பீதி அடைய தேவை இல்லை. அரசு வழங்கும் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அறிகுறிகள் தெரிந்தால் சுய மருத்துவம் செய்யாமல் ஆரம்ப சுகாதாரத்தை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்றார்.
கொரோனா கட்டுபாடுகள் வர உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘கொரோனா கட்டுப்பாடுகள் மேற்கொள்வது குறித்து அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது’ என்றார். புதுச்சேரியில் புதிய வகை கொரோனா பாதிப்பு உள்ளதா என கேட்டதற்கு புதுச்சேரியில் இதுவரை இல்லை, கொரோனா நோயாளி மூன்று பேர் மட்டுமே உள்ளனர், அதிக அளவில் இல்லை என்று அவர் கூறினார். புதிய வகை வந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் தெரிவித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுபாடு உள்ளதா என்ற கேள்விக்கு, ‘புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இதுவரை எது தடையும் இல்லை. இருப்பினும் அரசு வழிகாட்டுதல் வழிமுறையை அளிக்கும். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நோய் இருந்தால் அவர்கள் தனிமை படுத்துவார்கள்’ என்றும் ஆட்சியர் வல்லவன் தெரிவித்தார்.