புதுக்கோட்டை: புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் சையது அப்துல் ஹாசன் சாதலி. இவர் செருப்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சைனம்பூராணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சேக் அப்துல்லா(22). இவர் சீனாவின் ஜியான்ஹனா மாவட்டத்தில் கியூகார் மருத்துவ பல்கலை கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பை 5 ஆண்டு படித்து முடித்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் வந்த இவர் மருத்துவ பயிற்சிக்காக கடந்த 11ம் தேதி மீண்டும் சீனாவுக்கு புறப்பட்டு சென்றார்.
அங்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் சேக் அப்துல்லாவுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சென்றார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது பெற்றோருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கடந்த 24ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் தங்களது மகன் உயிருக்கு போராடி வருவதால் அவருக்கு உயர்தர சிகிச்சை அளித்து நல்ல உடல்நிலையுடன் மீட்டு இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவனின் பெற்றோர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு ெகாடுத்தனர்.