புலி வாலை பிடித்து சர்ச்சையில் சிக்கிய சந்தானம்! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம். வெளிநாடு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு மிருககாட்சி சாலைக்கு சென்றிருக்கும் அவர், புலியுடன் ஜாலியாக இருக்கும் வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நீச்சல் குளம் அருகில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் சந்தானத்துக்கு அருகில் ஒரு புலியும் இருக்கிறது. உருவத்தில் பெரிதாக இருக்கும் அந்த புலி அமைதியாக படுத்திருக்கிறது.

அப்போது சந்தானம் புலியின் வாலை கையில் பிடித்திருக்க, பூங்கா ஊழியர் புலியை தலையில் தட்டி எழுப்புகிறார். புலி தூக்கத்தில் இருக்கிறதா? என கேட்கும் சந்தானம், ஒருவித மயக்கத்தில் இருக்கும் புலியை தடவி கொடுக்கிறார். இந்த வீடியோ இப்போது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மிருக காட்சி சாலைகளுக்கு எதிராக பெரும் புகார்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. பணத்துக்காக கொடிய மிருகங்கள் மிருக காட்சி சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த மிருகங்களுக்கு புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் கொடுக்கப்படுவதாகவும், இதன் மூலம் மிருக காட்சிசாலைகள் வைத்திருப்பவர்கள் பெரும் பணத்தை சம்பாதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பிரபலங்கள் உள்ளிட்டோரை புலியின் அருகில் அமரவைத்து அதனை அவர்கள் விளம்பரத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் சந்தானம் போட்டிருக்கும் வீடியோவுக்கு கமெண்ட் செய்திருக்கும் நெட்டிசன்களும், விலங்குகளை வதைக்கும் இத்தகைய மிருக காட்சி சாலைகளுக்கு சந்தானம் ஆதரவு கொடுக்கிறாரா? ஒரு முன்னணி பிரபலமாக இருக்கும் அவரே இதனை ஊக்குவிக்கலாமா?, மிருக வதை குறித்த புரிதல் இல்லையென்றாலும், இதுபோன்ற வீடியோக்களை பகிர்வதையாவது செய்யாமல் இருந்திருக்கலாம் என்று கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.