சென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த பொங்கல் பண்டிகையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மட்டும் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த பொருட்கள் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததற்கு விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, கடலூர் மாவட்டம் மதனகோபாலபுரத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: வழக்கம்போல பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு நியாயவிலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் இடம்பெறும் என்றும், தமிழக அரசு நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் எனவும் எதிர்பார்த்து காத்திருந்தோம். இதனால், கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
ஆனால், அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதனால், விவசாயிகள் கடும் துயரத்துக்கு ஆளாக நேரிடும். கரும்பு பயிரிட்டவர்கள் நிம்மதியான மனநிலையில் சந்தோஷமாக பொங்கலை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை மனுஅனுப்பியும், எந்த பதிலும் இல்லை. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கோரியுள்ளார்.
உயர் நீதிமன்ற விடுமுறை காலஅமர்வில் இந்த மனு இன்று (டிச.28)விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.