மாஸ்கோ: போரில் ஈடுபட்டு வரும் தனது ராணுவத்தை உக்ரைன் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ரஷ்யா, இல்லாவிட்டால் தாங்கள் அதைச் செய்யவாம் என எச்சரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் – ரஷ்ய போர், 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலம் வாய்ந்த ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் உக்ரைன் ராணுவம் திணறி வருகிறது. இதன் காரணமாக, இந்தப் போரில் பல பகுதிகளை ரஷ்யாவிடம் உக்ரைன் இழந்துள்ளது. எனினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அளிக்கும் நிதி மற்றும் ஆயுத உதவி கொண்டு அது தொடர்ந்து போரிட்டு வருகிறது.
போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா தயார் என்றும் ஆனால், உக்ரைன் அதற்கு தயாராக இல்லாததே போர் தொடர்வதற்குக் காரணம் என்றும் ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், போர் முடிவுக்கு வர உக்ரைன் தனது ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரவ் வலியுறுத்தி உள்ளார். போர் முடிவடையாமல் இருப்பதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு அளிக்கும் உதவிகள்தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்ய ராணுவத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் அவர்கள் இந்த உதவிகளை அளித்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்தப் போர் முடிவுக்கு வருவது தற்போது உக்ரைன் மற்றும் அதனை ஆதரிக்கும் நாடுகளின் கைகளில்தான் உள்ளது என தெரிவித்துள்ள செர்கி லாரவ், ரஷ்யாவுக்கு எதிரான அர்த்தமற்ற எதிர்ப்பை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
செர்கி லாரவ்-க்கு பதில் அளித்துள்ள உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மிக்கைலோ போடோலிக், உண்மையை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் பயன்தராது என கூறியுள்ள அவர், தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிய பிறகுதான் உக்ரைன் தனது ராணுவத்தை போரில் இருந்து விலக்கும் என தெரிவித்துள்ளார்.