சென்னை: மக்களவை தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்டச்செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
2019 மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளில், தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வென்றது. மற்ற39 தொகுதிகளில் அதிமுக கூட்டணிவேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். அதற்கு, அதிமுகவில் இருந்துபிரிந்து, டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும் அமமுகவும் ஒரு காரணம் என கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் மெகாகூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் பல்வேறு கூட்டங்களில் பேசி வருகிறார்.
ஓபிஎஸ் அணியை இபிஎஸ் தரப்பு ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதிமுகவை பலப்படுத்த, அமமுக நிர்வாகிகளை தாய் கழகத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல் நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சி.வி.சண்முகம் முயற்சியில், அம்மாவட்ட அமமுக மாவட்டச் செயலாளர்கள் ஆர்.பாலசுந்தரம், ஆர்.அய்யனார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு, மக்களவை தேர்தலுக்கான பூர்வாங்கபணிகளை தொடங்கி இருப்பதாகமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சி.வி.சண்முகத்தின் நடவடிக்கையை மக்களவை தேர்தல் பணியாகவே அதிமுகவினர் பார்க்கின்றனர். அடுத்து வரும் மாதங்களில், அமமுகவில் இருந்து ஏராளமானோர் அதிமுகவுக்கு வர வாய்ப்பு உள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அவரது தரப்பு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கடந்த வாரம் கூட்டி இருந்தார். இந்நிலையில், இபிஎஸ், அதிமுக தலைமை செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், கட்சி செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தை அறிவித்துள்ளார். இக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்றுகாலை 10 மணிக்கு இபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைப்பது, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, கட்சியை பலப்படுத்துவது, பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 4-ம் தேதி விசாரணைக்கு வரும் வழக்கின் தன்மைக்கு ஏற்பசெயல்படுவது குறித்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.