மதுரை: தென் தமிழக மாவட்டங்களை பொறுத்தவரை ஜல்லிக்கட்டு போட்டிகள் என்பவை பண்பாட்டு அடையாளமாக வேரூன்றி இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கென மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே மாடுகளும், மாடு பிடி வீரர்களும் பயிற்சிகளை தொடங்கிவிடுகின்றனர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள துவரிமான் கிராமத்தின் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்று, பரிசு பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒன்றுக்கூடும் இப்பகுதி இளைஞர்கள் கிராமத்தில் உள்ள பொட்டல் காடுகளில் பழக்குவாடி எனப்படும் தற்காலிக மைதானமும் ,வாடிவாசலும் அமைக்கின்றனர்.
அதன் வழியே காளைகளை அவிழ்த்துவிட்டு அவற்றை மடக்கி பிடித்து பயிற்சி எடுக்கின்றனர். இந்த பழக்கவாடிகள் மாடு பிடிவீரர்களுக்கு மட்டும் அல்ல காளைகளுக்குமே பயிற்சி தளமாக அமைகின்றன. அத்துடன் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு வழங்கப்படும் நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, ஓட்ட பயிற்சி போன்றவற்றை தாங்களும் மேற்கொள்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் என்பவை உடம்பும், மனதும் நேர் கோட்டில் நிற்கும் செப்படி வித்தை என்பதை அறிந்துள்ள மாடுபிடிவீரர்கள் தீவிரமான விரதத்தை கடைபிடிக்கின்றனர். இடைவிடாத பயிற்சியும் விரதமும் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெற உதவும் என உறுதியாக நம்புகின்றனர்.
பயிற்சியும், விரதமும் ஒரு புறம் இருக்க தற்காலிக வாடிவாசல் அமைத்து இளைஞர்கள் பயிற்சியில் ஈடுபட காவல்துறையும், வருவாய்துறையும் அனுமதிமறுப்பதாக கூறும் இளைஞர்கள் கபடி, கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து விளையாட்டுகளை போல ஜல்லிக்கட்டு பயிற்சிகளுக்கும் அரசு ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெற்று கார், இருசக்கர வாகனம், கரவை பசுமாடுகள், சைக்கிள், தங்க காசு, பீரோ, கட்டில் என விலை உயர்ந்த பரிசுகளை காட்டிலும் தங்கள் கிராமத்திற்கு பெருமை சேர்ப்பதே இந்த இளைஞர்களின் விருப்பமாக இருக்கிறது.