முன்பக்கமாக பல் தள்ளியிருப்பதால் அரசு வேலை மறுத்த பி.எஸ்.சி – வழக்கு பதிந்த எஸ்.சி, எஸ்.டி ஆணையம்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள முக்காலி பகுதியில் இருந்து வனத்துக்குள் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆனவாயி கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் முத்து. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முத்து, அரசு பணிக்காக முயன்று வந்தார். இந்த நிலையில் பீட் ஃபாரஸ்ட் ஆப்பீசர் பணிக்கு ஆள் தேர்வு செய்ய உள்ளதாக கேரள அரசின் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பி.எஸ்.சி) அறிவித்தது. அந்த பணிக்கு விண்ணப்பித்த முத்து கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பீட் ஃபாரஸ்ட் ஆப்பீசர் பணிக்கான எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றார். அதைத்தொடர்ந்து இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த உடல் தகுதி தேர்விலும் வெற்றிப் பெற்றுள்ளார். இந்த நிலையில் மருத்துவ தகுதி சான்றிதழில் முன்பக்க பல் தள்ளியிருப்பதாக டாக்டர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பற்கள் முன்னால் தள்ளி இருப்பதால் பணி வழங்க இயலாது என பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

சிறுவயதில் பல் விழுந்தபிறகு மீண்டும் முழைத்த பல் இப்படி ஆனதாகவும், பணம் இல்லாததால் சரி செய்யும் சிகிச்சை செய்ய இயலவில்லை எனவும் முத்து கூறியுள்ளார். ஆனால், அந்த விளக்கத்தை பி.எஸ்.சி எற்றுக்கொள்ளவில்லை. பல் தள்ளியிருந்ததால் பழங்குடியின இளைஞருக்கு அரசு வேலை வழங்காத விவகாரம் விவாதமானது.

பல் நீண்டிருந்த பழங்குடியின இளைஞருக்கு வேலை மறுத்த பி.எஸ்.சி

இதுகுறித்து முத்து கூறுகையில், “பழங்குடியின சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட பீட் ஃபாரஸ்ட் ஆப்பீசர் பணிக்காக நான் விண்ணப்பித்திருந்தேன். எழுத்துத் தேர்விலும், உடல் தகுதித்தேர்விலும் வெற்றிபெற்றேன். சான்றிதழ் சரிபார்த்த சமயத்தில் எனது முன் பற்கள் தள்ளிய நிலையில் இருப்பதால் வேலை வழங்காமல் வெளியேற்றினர். வெளியே தள்ளிய நிலையில் உள்ள பற்களை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பணம் இல்லாததால் இதுவரை சரிசெய்யாமல் இருந்தேன். எனக்கு அரசு வேலை கிடைக்கும் என நம்பியிருந்தேன். இறுதிகட்டத்தில் எனது தள்ளிய பல்லை காரணம்காட்டி வேலை மறுத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது” என்றார்.

பழங்குடியின இளைஞரின் பல் முன்னால் தள்ளிய காரணத்தால் வேலை மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து வெளியான செய்திகள் அடிப்படையில் எஸ்.சி, எஸ்.டி ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. வனம் மற்றும் வன விலங்குகள் துறை முதன்மை செயலாளர், பி.எஸ்.சி செயலர் உள்ளிட்டோர் இது சம்பந்தமாக ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.சி தரப்பில் கூறும்போது, “வெளியே பல் தள்ளிய நிலையில் இருப்பவர்களுக்கு யூனிஃபார்ம் சர்வீசில் பணி வழங்க வேண்டுமானால் அரசு நியமன சட்டங்களில் மாற்றம் கொண்டுவரவேண்டும். அந்த இளைஞருக்க பல் தள்ளியிருப்பதாக மருத்துவ சான்றிதழில் குறிப்பிட்டுள்ளதால் எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை.

இளைஞர் முத்து

யூனிபார்ம் சர்வீஸ் விதிப்படி தேர்வாகும் நபரின் ஒவ்வொரு கண்ணுக்கும் முழு பார்வை சக்தி இருக்க வேண்டும். கால் முட்டிகள் ஒன்றை ஒன்று இடித்த படி இருக்கக்கூடாது. கால் நரம்புகள் வெளியே தெரியக்கூடாது. கால்கள் வளைந்த நிலையில் இருக்கக்கூடாது. பல் தள்ளியிருப்பது, திக்கித்திக்கி பேசுவது, கேட்கும் திறன் குறைவு உள்ளிட்டவை இருந்தால் வேலைக்கு சேர தகுதி இல்லாதவர் என ஏற்கனவே விதிமுறை உள்ளது. அந்த விதிமுறைப்படியே அந்த இளைஞருக்கு வேலை வழங்க இயலவில்லை” என தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது கேரளாவில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.