ஹைதராபாத்: மூக்கு வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்து, தனியார் சந்தையில் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படும் என்று பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மூக்குவழியாக செலுத்திக் கொள்ளும் பாரத் பயோடெக்கின் ‘இன்கோவாக்’ கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) இம்மாத தொடக்கத்தில் அனுமதி வழங்கியது.
மூக்குவழியாக பயன்படுத்தக்கூடிய, உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்து இன்கோவாக் ஆகும். அட்டவணைப்படி, இந்த மருந்தை 2 முறை செலுத்திக் கொள்ள வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட இதை பூஸ்டர் டோஸாகவும் பயன்படுத்தலாம்.
கோவின் வலைதளத்தில் தற்போது இன்கோவாக் மருந்தின் தனியார் சந்தை விலை ரூ.800 (ஜிஎஸ்டி தனி) என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசு விநியோகத்துக்கான விலை ரூ.325 (ஜிஎஸ்டி தனி) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2023 ஜனவரி நான்காவது வாரத்தில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறு பாரத் பயோடெக்கின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா கூறியதாவது: கோவாக்ஸின் மற்றும் இன்கோவாக் ஆகிய 2 கரோனா தடுப்பு மருந்துகளையும் வெவ்வேறு தளங்களில் உருவாக்கியுள்ளோம்.இன்கோவாக் வலியற்ற எளிதான முறையில் பயன்படும் கரோனா தடுப்பு மருந்தாகும். இந்த மருந்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, பாதுகாப்பானது, அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் உள்ள வாஷிங்டன் பல்கலை.யுடன் இணைந்து இன்கோவாக் மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.