யாருடன் கூட்டணி? எடப்பாடி தடாலடி; அதிமுக-பாஜக வட்டாரத்தில் பரபரப்பு!

அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனையால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அதிமுகவில் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கட்சி பொதுக்குழு கூடி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதில் சளைத்து போகாத ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான் எனக்கூறி எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை உச்சநீதி மன்றத்தில் வரும், ஜனவரி 4ம் தேதி நடைபெற இருக்கிறது. அதிமுக விவகாரத்தில் தீர்ப்பு சாதகமாக வருகிறதா? இல்லையா? என்பதை பொறுத்து அடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் வகையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.50 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் அணிவகுத்து உற்சாக வரவேற்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை அலுவலகம் வந்ததும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர். கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், தலைமைக் கழக நிர்வாகிகள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பா.வளர்மதி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, கே.பி.கந்தன், விருகை வி.என்.ரவி, ஆதிராஜாராம், ராஜேஷ், வெங்கடேஷ்பாபு உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அது, மட்டும் இல்லாமல் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுத்து வருவதால் அதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் காரில் சென்ற வேட்பாளரை வழிமறித்து கடத்திச் சென்ற விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விஜயபாஸ்கர் மீது வழக்கு போட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் ஓ.பன்னீர்செல்வம் பற்றி, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக்கொள்ளும். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம்.

வாக்குச்சாவடி அளவில் நமது கட்சியை பலப்படுத்த வேண்டும். திமுகவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்து, நேரத்தை வீணாக்காமல் மக்கள் பணியில் தீவிர கவனம் செலுத்துங்கள்.

சட்டப்போராட்டம் குறித்து கவலை கொள்ளாமல் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிராளிகளை எளிதில் வீழ்த்தி விடலாம். இவ்வாறு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

வர இருக்கும் தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி என்று அந்த கட்சியினர் கூறி வரும் நிலையில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறி இருப்பது அதிமுக-பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.