புதுடெல்லி: ராகுல் காந்தியை ராமருடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் பேசியதற்கு பாஜ கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சல்மான் குர்ஷித் ராகுலை ராமருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். ‘’ராமரின் பாதுகைகளை வைத்து பரதன் ஆட்சி நடத்தினார். அவர் வருவதற்கு முன்சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அதே போல் உ.பிக்கு பாதுகை வந்துவிட்டது. ராமர் விரைவில் வர இருக்கிறார். இது எங்களது நம்பிக்கை’’ என்று ராகுலின் பாதயாத்திரையை ஒப்பிட்டு பேசினார்.
குர்ஷித்தின் இந்த கருத்துக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜ செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனாவலா கூறுகையில், காங்கிரசுக்கு கடவுள் மீதான பக்தியை விட, தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மீதான பக்தியே அதிகம். நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் ஜாமீனில் வௌிவந்துள்ள ஒருவரை ராமருடன் ஒப்பிட்டு பேசுவது கண்டிக்கத் தக்கது. இது இந்துக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தையும் புண்படுத்துவதாக இருக்கிறது.
இந்து மத மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசிய காங்கிரஸ் தலைவர் குர்ஷித் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். ஆனால், கடவுள் காட்டிய வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும். அவ்வாறு கடவுள் காட்டிய வழியை பின்பற்றும் ராகுலை பற்றி சொன்னதில் என்ன தவறு உள்ளது என்று சல்மான் குர்ஷித் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.