விஜய் 67: த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், நிவின் பாலி; வியக்கவைக்கும் விஜய் பட அப்டேட்

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது. இந்த விழாவிற்கு முதல்நாள் வரை ‘வாரிசு’ பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது. ஆடியோ ஃபங்ஷன் அன்றுதான் மொத்த டீமும் சென்னையில் வந்து இறங்கியது. படம், பொங்கல் ரிலீஸ் என்பதால் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தீயாய்ப் பரபரக்கின்றன.

இன்னொரு பக்கம், ‘விஜய் 67’க்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை லோகேஷ் கனகராஜின் டீம் தொடங்கிவிட்டது. அந்தப் படத்தின் முக்கிய நடிகர், நடிகையர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இசை அனிருத், எடிட்டர் ஃபிலோமின் உட்பட தொழில்நுட்பக் கலைஞர்களும் தேர்வாகி வருகின்றனர். டாம் குருஸின் ‘மிஷன் இம்பாசிபிள்’ போன்று இதில் அதிரடி ஆக்‌ஷன்களை எதிர்பார்க்கலாம் என்ற பேச்சும் உள்ளது.

‘மாஸ்டர்’ கூட்டணி

இந்நிலையில் ‘விஜய் 67’ குறித்து லோகேஷ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“கமலின் ‘விக்ரம்’ படப்பிடிப்பின் இடையேதான் ‘விஜய் 67’க்கான லைன் லோகேஷுக்குத் தோன்றியது. உடனே அதை விஜய்யிடமும் சொல்லியிருக்கிறார். விஜய்க்கும் லைன் பிடித்துப் போய்விட, ‘விக்ரம்’ படப்பிடிப்பின் இடையே 67’க்கான கதையை டெவலப் செய்துகொண்டே வந்தார். ‘வாரிசு’ படப்பிடிப்புக்கிடையே விஜய்யிடம் முழுக்கதையையும் சொன்னார். அதன் பின் கதைக்கான லொக்கேஷன் விசிட் அடித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ‘விஜய் 67’க்கான படப் பூஜை சென்னையில் ஏவிஎம். ஸ்டூடியோவில் வெகு சிம்பிளாக நடந்து முடிந்தது. ஸ்டில்கள் வெளி வந்துவிடக்கூடாது என்பதற்காக கலந்துகொள்ள வந்திருந்தவர்களின் செல்போன்களை எல்லாம் ஸ்பாட் நுழைவு வாயிலிலேயே வாங்கி வைத்துக்கொண்ட பின்னர்தான் பங்கேற்க வைத்தனர். அதனால்தான் பூஜை ஸ்டில்கள் பரவலாக வெளிவரவில்லையாம்.

படத்தில் வில்லனாக நடிக்கப் பலரும் பரீசிலீக்கப்பட்டாலும் இப்போதைக்கு சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், நிவின் பாலி, த்ரிஷா ஆகியோர் கமிட் ஆனதாகச் சொல்கிறார்கள். இதர நடிகர்களின் தேர்வும் நடந்துவருகிறது. பல இடங்களில் பயணப்படும் ஆக்‌ஷன் பயணம்தான் படம் என்பதால் டெல்லி, காஷ்மீர், லடாக் உட்படப் பல இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. நடிகர்கள் சிலரிடம் மொத்தமாக பல மாதங்கள் கால்ஷீட் கேட்டு வாங்கி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

த்ரிஷா

கமலின் ‘விக்ரம்’ பட சிங்கிள், பட டீசர் வெளியிடும் முன்னர், தோட்டாக்களும் துப்பாக்கிகளும் கறிச்சோறுமாக ஒரு ஃபர்ஸ்ட் லுக் டீசர் ஒன்று பிரத்யேகமாகத் தயாரானது. அது வெளியானபோது பயங்கரமாக வைரலும் ஆனது. அதைப் போல ‘விஜய் 67’க்கான கதைக்கரு குறித்த டீசர் ஒன்றை படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன்னர் வெளியிட உள்ளதாகச் சொல்கிறார்கள். அநேகமாக ஜனவரி இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அதன் பின் பிற மாநிலங்களுக்குக் குழுவினர் பறக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.