வேலையே செய்றதில்ல… ஜாக்கிரதையா இருங்க… அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர்!

தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் உள்ள உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் கூட்டத்தை வாரந்தோறும் நடந்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் குறு,சிறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா,சாலை வசதி,குடிநீர் வசதி,மின் விளக்கு வசதி, பேருந்து வசதி என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் கடந்த வாரம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்பொழுது அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்காததால் அமைச்சர் தாமோ. அன்பரசன், பொதுமக்கள், வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார், அதிகாரிகள் வேலை செய்வதே இல்லை, ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

பல ஊர்களில் பேருந்து வசதி இல்லாததால், பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் குழந்தைகள் அவதிப்பட்டு வருகிறார்கள், அதனால் மக்கள் வயிற்று எரிச்சல்பட்டு வருகிறார்கள். அரசு அதிகாரிகள் செய்யும் செயல் உங்கள் மேல் வராது, அவையெல்லாம் ஆட்சியாளர்கள் ஆகிய எங்கள் மீது தான் வரும் என தெரிவித்தார்.

பொதுமக்கள் வழங்கிடும் மனுக்களை ஏதோ கடமைக்கு கொடுத்தார்கள் என்று நினைக்காமல், இந்த மனுக்களை நிதி இல்லை என்றால் எங்களிடம் அனுப்பி விடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், மாவட்ட ஆட்சியர், அமைச்சர், நாங்கள் பதில் சொல்கிறோம், கீழே இருக்கின்ற சிறு சிறு பிரச்சனைகள் எல்லாம் அதிகாரிகளால் செய்யக்கூடிய வேலைகள் நிறைய இருக்கிறது அவற்றையெல்லாம் சரிசெய்து கொடுத்து இந்த ஆட்சிக்கு நல்ல பெயரை பெற்று தர வேண்டும் என அமைச்சர் தாமோ. அன்பரசன் கேட்டுக் கொண்டார்.அமைச்சரின் இந்த எச்சரிக்கை அதிகாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்க்கொடி குமார், தேவேந்திரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.