230 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் சாலைகள் இந்த நிலையிலா? – கோவை மக்கள் வேதனை

சாலைகளை செப்பனிட 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் கோவை மாநகரின் முக்கிய சாலைகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதாள சாக்கடை பணிகள், சூயஸ் குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு பணிகளுக்காக கோவை மாநகரின் பெரும்பாலான சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. அதன் பிறகு சாலைகள் முழுமையாக செப்பனிடப்படாத நிலையில் மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய மற்றும் வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய மாநகரின் முக்கிய சாலைகள் குண்டும் குழியமாகவும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
image
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நிலை தொடரும் நிலையில் கோவையின் மாநகரசாலைகளை செப்பணிட 230 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, மாநகர மாநகராட்சி ஆணையாளர் மற்றும் கோவையின் பொறுப்பு அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி ஆகியோர் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கோவையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வரக்கூடிய சூழ்நிலையில், பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியும்மாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் வாகனத்தை சாலையில் இயக்க முடியாத நிலையிலும், நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கோவைக்கான வளர்ச்சி பட்டியலை தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சி பகுதிகளில் சாலை மேம்பாட்டிற்காக 230 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதையும் சேர்த்து தெரிவித்து இருந்தார். இருந்தபோதிலும் தற்போது வரை பெரும்பாலான சாலைகள் செப்பனிடப்படாமல் மக்கள் சிரமத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
image
இதற்கு உதாரணமாக கோவை வெள்ளக்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சேரும் சகதியுமாய் உள்ளது. வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் நடந்து வருவதற்கும் வாகனத்தில் வருவதற்கும் சிரமப்படுகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.