தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. வரும் பொங்கலுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் மூலம் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்றும் அதற்காக ரூ.2,356 கோடி செலவாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு வழக்கம்போல் டோக்கன் முறை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் டோக்கன் வழங்கும் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள் “தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு காண டோக்கன்கள் வரும் டிசம்பர் 30ம் தேதி முதல் வழங்கப்படும். அதன்படி வரும் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 300 டோக்கன்கள் வீடு வீடாகச் சென்று வழங்கப்படும்.
அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் டோக்கன் வழங்குவது குறித்து முடிவு செய்வார்கள். நுகர்வோருக்கு வழங்கப்படும் டோக்கனில் பொங்கல் பரிசு தொகை பெறும் நாள் மற்றும் நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி மக்கள் நியாய விலை கடைகளுக்கு சென்று பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். பொங்கலுக்கு கரும்பு வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முடிவு எடுப்பார்” என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.