சென்னை: பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன் டிசம்பர் 30,31, ஜனவரி 2,3,4 ஆகிய 5 நாட்கள் வழங்கப்படும் என அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி கூட்டாக பேட்டியளித்தனர். பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்வது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் விரிவான தகவல்களை தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு அரசு அறிவித்துள்ள 1000 ரூபாய் ரொக்க பணம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை விநியோகம் செய்வதற்கான டோக்கன், தமிழகம் முழுவதும் டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 2,3,4 ஆகிய 5 நாட்கள் வழங்கப்படும். டோக்கன் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்படும். அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்கள் தரமான முறையில் இருக்கும்.
மாற்றுத்திறனாளிகள்,வயதானவர்கள்,ரேஷன் கடைக்கு நேரில் வர முடியாதவர்கள், கைரேகை வைக்க முடியாதவர்கள், தங்களுக்கு மாற்றாக யார் ரேஷன் கடைக்கு செல்கிறார்கள் என்ற தகவலை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்துவிட்டால் மாற்று நபரிடம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு முன்பு வாங்க முடியாதவர்கள் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வாங்குவதற்கும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இந்திய உணவு கழகத்தின் மூலம் ஆந்திரா,தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது.ஆனால் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய அரிசியில் பற்றாக்குறை இருப்பதால் கூடுதலாக கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.