நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருக்கிறார் அஜித். போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படமானது பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்தியிருக்கும் சூழலில் படத்தில் இடம்பெற்றிருக்கும் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. வினோத்துடன் இணைந்த முதல் இரண்டு படங்களில் விட்டதை இந்தப் படத்தில் அஜித் பிடித்துவிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. நானும் ரௌடிதான் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் சிவன் அடுத்து சூர்யாவை வைத்து இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் தோல்வியை சந்தித்தார்.
இருந்தாலும் விக்னேஷ் சிவன் மேக்கிங் சிறப்பாக இருக்கும் என்பதால் அஜித்தை வைத்து இயக்கப்போகும் படம் நிச்சயம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ஏகே ரசிகர்கள். படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்தச் சூழலில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், கௌதம் வாசுதேவ், ஹலிதா ஷமீம் உள்ளிட்டோர் இணைந்து பேட்டி கொடுத்தனர். அந்தப் பேட்டியின்போது விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கப்போகும் படத்தில் தான் நடிப்பதை கௌதம் வாசுதேவ் உறுதி செய்தார்.
அதனையடுத்து நிகழ்ச்சியின் நெறியாளர் விக்னேஷ் சிவன் படத்திலும் நடிக்கிறீர்களா என கேட்டார். அதற்கு பதிலளித்த கௌதம், அவருடைய படத்தில் எந்த வகையிலாவது நான் இருப்பேன் என பதிலளித்தார். இதன் மூலம், அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிப்பதை கௌதம் உறுதி செய்துவிட்டார் என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.