அதிமுகவினர் ஆள் பிடிக்கிறார்கள் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அமமுகவில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அ.தி.மு.க.வுக்கு சென்று உள்ளனர். பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அவர்களை வரச் சொல்லி இருக்கிறேன். அதிமுகவினர் எங்கள் கட்சியை சேர்ந்த யாரையாவது பிடித்தால் அடுத்த நாளே திறமையான தகுதியான நபர்களை எங்களால் நியமிக்க முடியும். அமமுக வீரர்களின் பட்டாளம். தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதனால் விலகி செல்லும் சிலரால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது. தர்மபுரியில் ஒருவர் சென்றார். என் கூடவே இருந்தவர் துணை பொதுச்செயலாளராகவும் அவர் இருந்தார். 5, 6 நிர்வாகிகளும் அவருடன் சென்றனர். அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளோம். விலகி செல்பவர்களின் இடத்தை நிரப்ப தகுதியான பலர் உள்ளனர். இப்படி தகுதியான நபர்கள் எங்கள் கட்சியில் இருப்பதால் தான் பழனிசாமி ஆட்களை பிடி என்கிறார். சொந்த பிரச்னை, சுயநலத்தால் கட்சியை விட்டு சிலர் செல்வார்கள். இப்படி பதவி வெறியுடன் தடம் மாறுபவர்களை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. அது பெரிய விஷயமே இல்லை. விலகிச் சென்றவர்கள் முகத்தில் ஒருவித பதற்றம் தெரிவதையும் நீங்கள் பார்க்கலாம்.

கட்சி தொடங்கி 5 ஆண்டுகளாகிறது. 2 தேர்தல்கள் எங்களுக்கு பின்னடைவு தான். இருந்தாலும் தொண்டர்களும், நிர்வாகிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளோம். அடுத்து பாராளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்கான பூத் கமிட்டியை அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கழகம், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர், பகுதி செயலாளர் இவர்களையெல்லாம் அழைத்துள்ளேன். அடுத்த கட்டமாக மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகிகளை அழைத்து பேச உள்ளேன். அமமுகவில் 27 அணி உள்ளது. அவர்களையும் சந்திக்க உள்ளேன். 40 தொகுதிகளிலும் அமமுகவை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் சரியான முடிவை எடுப்போம்.

அதிமுகவை கைப்பற்றுவோம் என்று கூறிய தினகரன் தற்போது அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறாரே என்று சிலர் கேட்கிறார்கள். அதிமுக இன்று தவறானவர்கள் கையில் உள்ளது. பி.எஸ்.வீரப்பா கையிலும், எம்.என்.நம்பியார் கையிலும் புரட்சி தலைவரின் சின்னமும் கட்சியும் உள்ளது. எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுவோம். நீங்கள் பலமுறை கேட்டுள்ளீர்கள். அ.தி.மு.க.வுடன் இணைவீர்களா? என்று அதற்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்யமாட்டோம். கூட்டணிக்கு செல்வீர்களா? என்று கேட்கிறீர்கள். எங்களுடைய பலமும் உயரமும் எங்களுக்கு தெரியும். 

சில பேர் மாதிரி ஆணவத்தில், அகம்பாவத்தில், பணத்திமிரில் எங்களது நடவடிக்கைகள் இருக்காது. நாங்கள் வளர்ந்து வரும் ஒரு இயக்கம். வரும் காலத்தில் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தக் கூடிய உறுதியான தொண்டர்கள் இயக்கம். அதை அடையும் வரை போராடுவோம். ஓயமாட்டோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.