“அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்; அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” – மா.செ கூட்டத்தில் எடப்பாடி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், 27-ம் தேதி காலை நடைபெற்றது. இதில் அமைப்புரீதியாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த 75 மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி

முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடிக்கு அங்கிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு, பா.ஜ.க உடனான கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற மூத்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் நம்மிடம் கூறியதாவது, “குறிப்பிட்ட ஒரு கால இடைவெளிக்குள் மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்த வேண்டும் என்று கட்சியின் விதிமுறைகள் உள்ளது. அதன்படி, பல மாதங்களுக்கு பின்னர், 27-ம் தேதி கூட்டம் நடத்தப்பட்டது. நீண்ட நாள்களுக்கு பின்னர் கூட்டம் நடைபெற்றதால், பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. குறிப்பாக, ஓ.பி.எஸ் மீதான தங்களின் கோபத்தை, துணை பொதுச் செயலாளர்களான கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினர்.

அதிமுக ஆலோசனை கூட்டம்

எடப்பாடிக்கு தொண்டை வலி என்பதால், வழக்கமான ஆக்ரோஷம் இல்லாமல், பொறுமையாக அரைமணி நேரத்துக்கும் மேலாக பேசியிருந்தார். ‘பன்னீர் உண்மை முகம் எனக்கு தெரியும். பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர். ஆனால், அவர் குறித்து தற்போது பேச ஒன்றுமில்லை. நீங்களும் அவர் குறித்து பேசி பேசி, அவரை ஏன் டைம்லைனில் வைக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை எல்லா பிரச்னையும், பொதுக்குழு தொடர்பான வழக்கு தீர்ப்போடு முடிந்துவிடும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்கலாமா வேண்டாமா என்பது குறித்து தற்போது பேசி எந்த பயனுமில்லை. எந்த தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி. அதை யாரும் மறுக்க முடியாது.

அதிமுக ஆலோசனை கூட்டம்

இந்த முறை மெகா கூட்டணி அமைக்கவிருக்கிறோம். நமது தேசிய கூட்டணியில் இருக்கும் பாஜக குறித்து யாரும் பேச வேண்டாம். அவர்கள் எப்போதும் நம்மை வற்புறுத்தியது கிடையாது. தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து, இதுபோன்ற ஒரு கூட்டம் போட்டு முடிவு எடுப்போம். அதுவரை பொறுமையாக இருங்கள். நாம் இப்போது சரியான பாதையில்தான் பயணித்து கொண்டு இருக்கிறோம்.

நம்முடைய இலக்கு சட்டமன்றத் தேர்தல்தான். ஆனால், அதில் வெற்றி பெற வேண்டுமென்றால், நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும். பல மாவட்டங்களில் பூத் கமிட்டி செயலிழந்து இருப்பதாக எனக்கு தகவல் வருகிறது. அதை சரிசெய்து தேர்தலுக்கான பணியை தற்போதே தொடங்குங்கள். வெற்றியை தேடித்தரும் நிர்வாகிகளுக்கு தக்க பரிசும் காத்திருக்கிறது. குறிப்பாக கூட்டுறவு சங்கத் தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. அதற்காக வேலையை தொடங்குங்கள். கூட்டுறவுத் தேர்தல் பெறும் வெற்றிதான், நீடிக்கும். எனவே, கவனமாக பணியாற்றுங்கள்’ என எடப்பாடி பேசினார்”  என்றனர்.

எடப்பாடி பழனிசாமி – உதயகுமார்

இந்த கூட்டம் நிறைவு பெற்றபின்னர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது மகள் திருமண விழாவுக்கான அழைப்பிதழை அனைத்து நிர்வாகிகளுக்கும் வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.