புதுடில்லி, கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால், அதை கட்டுப்படுத்த தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்வதற்கான அவசரகால ஒத்திகை, நேற்று நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்பட்டது.
ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான் உட்பட பல நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து, மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கட்டமைப்பு வசதிகள்
இந்த வகையில், நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதற்கான அவசரகால ஒத்திகையை நேற்று நடத்தும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், கொரோனா சிறப்பு மையங்களில் நேற்று ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகையில், சில தனியார் மருத்துவமனைகளும் பங்கேற்றன.
அனைத்து மாவட்டங்களில் உள்ள சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை, அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்த தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், செயற்கை சுவாச கருவிகளுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டன.
மேலும், டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார பணியாளர்கள், ஆயுஷ் டாக்டர்கள், முன்களப் பணியாளர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டன.
தொற்று அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதில் இருந்து, அவர்கள் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது வரையிலான நடைமுறைகளும் ஒத்திகை பார்க்கப்பட்டன.
தமிழகம், புதுடில்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் நேற்று ஒத்திகையில் ஈடுபட்டன.
புதுடில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று நடந்த ஒத்திகையை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.
தயார் நிலை
அப்போது அவர் கூறியதாவது:
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. நம் நாட்டிலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது.
அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், நம் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்யவே, முன்னெச்சரிக்கையாக இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது.
இதில் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் பங்கேற்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்