சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதந்திர மாமன்றக் கூட்டத்தில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சியின் மாதந்திர மாமன்றக் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று (டிச.28) நடைபெற்றது. இதில் பேசிய கணக்குக் குழுத் தலைவர் தனசேகரன், “சென்னை மாநகராட்சியில் ஏழை மக்களுக்கு தினசரி 20 லிட்டர் மினரல் குடிநீர் வழங்க வேண்டும் என அதிமுக ஆட்சியில், அம்மா குடிநீர் ஆலைகள் துவங்கப்பட்டன. அதன் நோக்கம் மாறி, ஏழை மக்களுக்கு பதிலாக அம்மா குடிநீர் ஆலைகளில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு வணிகர்கள் அதனை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர். சென்னை முழுதும் ஒரே ஒப்பந்ததாரர் கடந்த பத்து ஆண்டுகளாக ஆலைகளை பராமரித்து வருகிறார். மாநகராட்சி அதிகாரிகளும் முறையாக ஆலைகளை கண்காணிக்காமல் உள்ளனர்.
மேலும், பொது மக்களிடம் பயன்பாடு குறைவாக உள்ள அம்மா குடிநீர் ஆலைகளை குடிசைப் பகுதிகளுக்கு அருகில் இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது மூடவேண்டும். போரூரில் இயங்கும் பிரபல மருத்துவமனை, ஏழு ஆண்டுகளாக சொத் துவரி செலுத்தாமல் உள்ளது. அதேபோல், வடபழனியில் செயல்படும் பிரபல மருத்துவமனை, மாநராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளது. அவற்றை தடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, “சென்னை முழுதும் 52 அம்மா குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு இதற்கான செலவு மிக குறைவு. வரும் காலங்களில் அம்மா குடிநீர் ஆலைகளால் கூடுதல் செலவு ஏற்பட்டால் நடைமுறைகளை மாற்றலாம். பராமரிப்பு மற்றும் கண்காணிப்பை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். போரூரில் செயல்படும் மருத்துவமனை இந்த ஆண்டுக்கான சொத்து வரியை செலுத்தியுள்ளனர்” என்றார். இதனைத் தொடர்ந்து 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதில் சில முக்கிய தீர்மானங்களின் விவரம்:
- சென்னை மாநகராட்சியில், இரண்டு சதவீத தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் ஜன.15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் நாய் இனக்கட்டுபாடு மையம் அமைக்கப்பட உள்ளது.
- கரோனா, டெங்கு, மலேரியா தடுப்பு பணிகளில் பணியமர்த்தப்பட்டவர்களின் பணிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது.
- சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் 1.77 லட்சம் தெரு விளக்கு மின் கம்பங்கள் மற்றும் 200 உயர் கோபுர மின் விளக்குகள் இயக்குவதற்கும், பராமரிப்புக்கும் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
- பெருங்குடி குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டு, சுற்றுச்சூழல் பூங்கா, சி.என்.ஜி. பூங்கா ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஏற்ப தயார்ப்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.