அவை, நவதானியங்கள் அல்ல; சிறுதானியங்கள்! ஆனாலும் குறையொன்றுமில்லை `பிக்பாஸ்' கமல் அவர்களே?

கமல்ஹாசன் கலக்கிக் கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’  நிகழ்ச்சியில் தொடர்ந்து புத்தகப் பரிந்துரையைச் செய்துவருகிறார். அதேபோல, அவ்வப்போது பொதுவான விஷயம் ஒன்றையும் தொட்டுப்பேசத் தவறுவதில்லை. அந்த வகையில், கடந்த வாரத்தில், ‘எல்லோரும் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்’ என்று பேசி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

பொதுவாகவே சிறுதானியங்கள் குறித்து கடந்த பல ஆண்டுகளாகவே இயற்கை விவசாயிகள், சூழல் ஆர்வலர்கள் என்று உலக அளவில் பேசிவருகின்றனர். இதையடுத்து, உலக அளவில் சிறுதானியத்துக்கான மரியாதை கூடிவருகிறது. வரும் 2023 -ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்து சிறப்பு செய்திருக்கிறது ஐ.நா சபை.

கம்பு

உலகம் முழுக்கவே ஒரு காலத்தில் சிறுதானியங்கள்தான் முக்கிய உணவாக இருந்தன. காலப்போக்கில் அந்த இடத்தை அரிசி, கோதுமை போன்றவை ஆக்கிரமித்துவிட்டன. இத்தனைக்கும் அதிக செலவு இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ரசாயன உரங்கள் பெரும்பாலும் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படுபவைதான் சிறுதானியங்கள். சொல்லப்போனால், அவற்றுக்குத் தண்ணீரும் அதிகமாகத் தேவைப்படாது. மானாவாரி நிலங்களில் கைத்தெளிப்பாக தெளித்துவிட்டாலே வளர்ந்து பலன் தரக்கூடியவைதான் சிறுதானியங்கள். ஆனால், பெரும்பொருள் செலவும், அதிக பணியாட்களும், அதீத கவனிப்பும் தரப்படக்கூடிய நெல், கோதுமை உற்பத்திக்குத்தான் உலக நாடுகள் அதிக முக்கியத்துவம் தருகின்றன.

இத்தகைய சூழலில்தான், மீண்டும் சிறுதானியங்கள் பற்றி உலக அளவில் விழிப்புணர்வு ஊட்டக்கூடிய நிகழ்வுகள் பலதரப்பிலும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், கமல்ஹாசன் போன்ற பிரபலங்கள் ஒரு விஷயத்தைத் தொடும்போது, அதன் பரவல் அதிகமாகவே இருக்கும். ‘கமலே சிறுதானியம் பற்றி சொல்லிட்டாரே’ என்று அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி, அவருடைய கட்சிக்காரர்கள், பிக்பாஸ் ரசிகர்கள் என்று ஒரு பெரும்கூட்டத்துக்கே அந்தச் செய்தி எளிதாக சென்றடைந்துவிடும்.

கேழ்வரகு

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பேசியது இதுதான்:

”ஐ.நா சபை, வரும் 2023 -ம் ஆண்டை சிறுதானியங்களின் ஆண்டாக அறிவித்துள்ளது. இது, தொடர்ந்து இந்தியா கொடுத்துவந்த அழுத்தத்தினால்தான் என்று கருதுகிறேன். சிறுதானியங்கள் என்று சொல்லும்போது, கம்பு, கேழ்வரகு… இன்றைய ஜெனேரேஷனுக்கு புரியற மாதிரி சொல்லனும்னா ‘மில்லட்’னு சொல்லுவாங்க. சங்க இலக்கியங்கள்லகூட இதைப்பற்றிய குறிப்புகள் இருக்கு.

நவதானியம்கிறது கல்யாணத்துல ஒரு சடங்கா மட்டுமே மாறி இருக்கிறது. உணவு வகைகளில் அதிகமாக இல்லாமல், மொத்தமாக அரிசி, அதுவும்… கூர்தீட்டப்பட்ட அரிசி பிரபலமாகவும் பரவலாகவும் இருந்து வருகிறது. ஆனால், அது அத்தனை பெரிய ஆரோக்கியமான விஷயம் அல்ல என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது. தமிழகமும் இப்பொழுது உணர வேண்டும்..

இங்கே இன்னொரு கணக்கைச் சொன்னால்… கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. தமிழகத்தில மட்டுமே கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் எனும் சர்க்கரை நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு நோய் இருக்கிறது என்று தெரியாமலேயே வாழ்க்கை முறை, உணவு முறைகளை மாற்றாமல் இருப்பவர்கள் 35-40 வயதுக்காரர்கள்தான் என்கிறார்கள்.

மில்லட் என்பதிலிருக்கும் நார்ச்சத்து போன்றவை நம் உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். அது வராமலே இருப்பதற்கு ஒன்று… ஜீன்ஸ் உதவி இருக்கவேண்டும். இன்னொன்று… உங்கள் வாழ்க்கை முறை உதவவேண்டும்.

சிறுதானியம்

60-க்கு முன்னாடி இந்த பிரஷர் குக்கரெல்லாம் வருவதற்கு முன்பாக சோறு வடிக்கறதுனுதான் அதுக்கு பேரு. இப்ப எல்லா ஸ்டார்ச்சும் உள்ள போயிடுது. எல்லாத்தையும் ஒன்றாக உட்கொள்கிறோம். அதன் விளைவாகக்கூட இருக்கலாம்.

இதை உங்களுக்கு ஏன் சொல்றேன்னா… நாடு, வீடு எல்லா ஆரோக்கியமும் மிக முக்கியமானது. நம்ம வாழ்க்கை முறையா மாத்தறது பெரிய கஷ்டமில்ல. பீட்சா,  பர்கர்னு குயிக்கா மாற முடியுதுல்ல பத்து வருஷத்துல. ரெண்டாயிரம் வருஷமா இருந்த பழக்கத்தை எதுக்கு விட்டுக் கொடுக்கணும். உடம்புக்கு நல்லதுனா செய்யலாமே அதுவும் சுவையானதுதான்… சுவையும் ஒண்ணும் குறைஞ்சுடாது” என்று அக்கறை பொங்க பதிவுசெய்தார் கமல்ஹாசன். இதற்காக அவருக்கு நம்முடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளலாம்.

மத்திய அரசும், மாநில அரசும்கூட ரேஷன் கடைகள் மூலமாக சிறுதானியங்களை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவலை வெளியிட்டார்கள். ஆனால், ஓராண்டுக்கும் மேலாகியும் அது தகவலாகவேதான் இருக்கிறது. இந்த சிறுதானிய ஆண்டிலாவது அதை நடைமுறைப்படுத்தினால், அரசாங்கங்களையும் பாராட்டலாம்.

பின்குறிப்பு: கமல் பேச்சுவாக்கில் கூர்தீட்டப்பட்ட அரிசி என்று குறிப்பிட்டார். அதாவது, முன்பெல்லாம் கைக்குத்தல் அரிசிதான் பயன்படுத்தப்பட்டது. அது, நெல்லின் மேற்தோலை மட்டுமே பிரித்தெடுக்கும். ஆனால், அரிசி அரவை இயந்திரங்கள் வந்தபிறகு, மேற்தோலுக்கு அடுத்திருக்கும் நார்ச்சத்துமிக்க பாகத்தையும் சேர்த்தே பிரித்தெடுத்துவிடுகிறார்கள். அதாவது, பாலிஷ் செய்துவிடுகிறார்கள். இந்த அரிசியை பட்டைத் தீட்டப்பட்ட அரிசி என்பார்கள். அதைத்தான், கூர்தீட்டப்பட்ட அரிசி என்று தவறாகப் பயன்படுத்திவிட்டார் கமல். ஒருவேளை நம் உடலை அந்த அரிசி பதம்பார்ப்பதால் அப்படிச் சொன்னாரோ… என்னவோ?!

நவதானியம்

அதேபோல, நவதானியம் என்கிற வார்த்தையையும் ஓரிடத்தில் பயன்படுத்தினார். சிறுதானியம், நவதானியம் இரண்டையும் பெரும்பாலும் குழப்பிக் கொள்ளவே செய்கிறார்கள். விவசாயம் பற்றி அறிந்தவர்களில் பலரும்கூட குழம்பத்தான் செய்கிறார்கள். இணையத்தில் தேடினாலும் பலரும் குழப்படி செய்துதான் பதிவிட்டுள்ளனர்.

உண்மையில் சிறுதானியம், நவதானியம் இரண்டும் வேறுவேறானவை. நவதானிய வரிசையில் வருபவை: கோதுமை, நெல், துவரை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை, எள், உளுந்து மற்றும் கொள்ளு (ஊருக்கு ஊர் இந்த தானியங்களில் சில வேறுபடும்).

சிறுதானிய வரிசையில் வருபவை… வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய சிறிய வடிவ தானியங்கள்தான் (இதிலும் ஊருக்கு ஊர் சில தானியங்கள் வேறுபடும்).

-பூநி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.