சென்னை: உரிமையியல் வழக்கு தொடர்வது என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை தேவையில்லாமல் பறிக்க முடியாது எனக் கூறி, நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஒப்பந்தம் மற்றும் டெண்டர் தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவிப்பு வெளியிட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு எதிராக, கோவை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் முத்துக்குமார் என்பவர் தடை உத்தரவு பெற்றுள்ளார். இவர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குனர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 227-ஐ உயர் நீதிமன்றம் தேவைப்படும்போதுதான் பயன்படுத்த வேண்டும். சிறு தவறுக்காக உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்கை இந்தப் பிரிவை பயன்படுத்தி ரத்து செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதாகக் கூறி, கோவை நீதிமன்றதில் உள்ள வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுத்து விட்டார்.
மேலும், உரிமையியல் வழக்கு தொடர்வது என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை தேவையில்லாமல் பறிக்க முடியாது எனக் கூறி, நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.