ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தரிசனம் – பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம்

திருமலை: வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை திருப்பதிதிருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால், திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடரமணா ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், இணை நிர்வாக அதிகாரி சதா பார்கவி, திருப்பதி எஸ்பி. பரமேஸ்வர் ரெட்டி உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஓர் இடத்திலும் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். திருப்பதியில் மட்டும் 8 இடங்களில் 92 விநியோக கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் 1-ம் தேதி மதியம் 2 மணியில் இருந்து சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். தொடர்ந்து 4.50 லட்சம் டோக்கன்கள் பக்தர்களுக்கு ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும். திருமலையில் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

இலவச டோக்கன்கள் பெற்றுக்கொண்ட பக்தர்கள், அதில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் ஒரு மணி நேரத்துக்கு முன்பு திருமலைக்கு வந்தால் போதுமானது. டோக்கன் பெற்றவர்கள், திருமலையில் உள்ள  கிருஷ்ணாதங்கும் விடுதி அருகே ஆஜராகவேண்டும். பக்தர்களின் கூட்டத்தால் டிசம்பர் மாதம் 29-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை திருமலையில் அறைகள் முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.

ஜனவரி 1-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நேரில்வரும் அரசியல் பிரதிநிதிகளுக்கு மட்டுமே தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும். ஜனவரி மாதம்2-ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி, அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்க ரத ஊர்வலம் 4 மாட வீதிகளிலும் நடைபெறும், மறுநாள் 3-ம் தேதிதுவாதசியை முன்னிட்டு, காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் 3.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் 2 மலைப்பாதைகளும் திறந்தே இருக்கும். கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டியது கட்டாயம். இவ்வாறு சுப்பாரெட்டி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.