கணவரை தாக்கிய கொள்ளையர்கள்… தடுக்க வந்த நடிகை சுட்டுக்கொலை

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையை தடுக்க முயன்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை இன்று (டிச. 28) சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். நடிகை ரியா குமாரி என்பவர் தனது கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பிரகாஷ் குமாரும் அவர்களது இரண்டு வயது மகளும் காரில் தேசிய நெடுஞ்சாலை 16 வழியாக கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாக்னன் காவல் நிலையப் பகுதியில் உள்ள மகிஸ்ரேகா அருகே இன்று காலை 6 மணியளவில் நீண்ட நேர பயணத்தால், சற்று ஓய்வெடுத்துக்கொள்ள நெடுஞ்சாலை ஓரமாக பிரகாஷ் குமார் காரை நிறுத்தியுள்ளார். அப்போது, திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கி, அவரது பொருட்களை கொள்ளையடிக்க முயன்றது. கணவனை மீட்க நடிகை ரியா குமாரி முயன்றுள்ளார். அப்போது, அவர்கள் நடிகையை சுட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

குமார் தனது மனைவியை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சுமார் 3 கி.மீ. குல்காச்சியா-பிர்டாலாவில் நெடுஞ்சாலையில் உதவிக் கேட்டு கெஞ்சியுள்ளார். அப்போது அங்கு தென்பட்ட சில உள்ளூர் மக்களிடம் நடந்ததை பிரகாஷ் குமார் விளக்கிய நிலையில், ரியா குமாரியை உலுபெரியாவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி வருவதாகவும், கணவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். “நாங்கள் நடிகையின் கணவரிடம் பேசினோம், மகள் வயதில் மிகச் சிறியவராக இருப்பதால், அவருக்கும் மேலும் தொந்தரவு கொடுக்க விரும்பாததால் அவரிடம் பின்னர் பேசலாம் என முடிவெடுத்துள்ளோம். உதவிக்காக அந்த நபர் அணுகிய உள்ளூர்வாசிகளிடமும் விசாரணை நடத்த உள்ளோம்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். அவர்களின் கார் தடயவியல் பரிசோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.