திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட தையல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேரி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வீரபத்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் காங்கேயன், மாவட்ட செயலாளர் பாரி, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த அபிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண் தையல் தொழிலாளர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறையால் தையல் எந்திரம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு விண்ணப்பித்த தகுதி உள்ள அனைவருக்கும் உடனடியாக தையல் எந்திரம் வழங்க வேண்டும். வந்தவாசி, திருவண்ணாமலை மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களை சேர்த்திட மாவட்ட சமூக நலத்துறை மாவட்ட அலுவலரிடம் கடந்த மார்ச் மாதம் 200 மனுக்கள் வழங்கியும், அவற்றின்மீது எந்தவித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. எனவே மனுவில் உள்ள நபர்களை உடனடியாக உறுப்பினராக சேர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் தையல் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.