குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தீண்டாமை மிக முக்கிய பிரச்னை குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டிப்பு

மதுரை: குடிநீரில் மனிதக் கழிவை கலந்த விவகாரத்தில், ‘தீண்டாமை மிக முக்கிய பிரச்னை. குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது’ என உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையனூர் கிராமத்தில் தலித் மக்களின் குடியிருப்பு பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கோட்டை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அக்கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, இரட்டை டம்ளர் முறையை பின்பற்றுதல் மற்றும் கோயிலுக்குள் தலித் மக்களை அனுமதிக்க மறுத்தது உள்ளிட்ட விவகாரங்கள் தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இன்னும் தீண்டாமை பின்பற்றப்படுகிறது. எனவே, இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யவும், இக்குழுவின் ஆய்வு அறிக்கைப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும், மனிதக் கழிவு கலந்த குடிநீரை குடித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

விடுமுறை கால அமர்வில் நேற்று மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன் வக்கீல் அழகுமணி ஆஜராகி, ‘‘இந்த மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்’’ என முறையிட்டார். இதையடுத்து இந்த மனுவை நேற்று பிற்பகலில் நீதிபதிகள் விசாரித்தனர். அரசு கூடுதல் வக்கீல் ரவி ஆஜராகி, ‘‘இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
 மனுதாரர் வக்கீல் அழகுமணி ஆஜராகி, ‘‘21ம் நூற்றாண்டிலும் தீண்டாமை தொடர்வது ஏற்புடையதல்ல. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல கிராமங்களில் தீண்டாமை இருக்கிறது. சிபிசிஐடி போன்ற இதர அமைப்புகளைக் கொண்டு விசாரித்தால் தான் இங்குள்ள தீண்டாமையை தடுக்க முடியும்’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘தற்போது நூறு சதவீதம் தீண்டாமை அகற்றப்பட்டு விட்டது என கூற முடியாது. அதே நேரம் நாட்டின் விடுதலைக்கு முன்னர் இருந்த தீண்டாமை பிரச்னை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. 10 சதவீத தீண்டாமை அங்கும், இங்குமாய் உள்ளது. வெறுமனே சிபிசிஐடி விசாரிப்பதால் மட்டும் தடுக்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து தான் அகற்ற முடியும். தீண்டாமையை தடுக்க சட்டம் உள்ளது. அதிகாரிகளும் செயல்படுகின்றனர். ஆனாலும், முழுமையாக அகற்ற முடியவில்லை.

இது வருத்தமாக உள்ளது. ஆனால், தீண்டாமையின் அளவீடு குறைந்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. இது மிக முக்கியமான பிரச்னை. எனவே, இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை புதுக்கோட்டை கலெக்டர், எஸ்பி மற்றும் மனித உரிமைப்பிரிவு டிஎஸ்பி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை  ஜன. 5ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பாராட்டு: புதுக்கோட்டை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமைகளை களைய துரித நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.