குடிநீரில் மலம், தீண்டாமை, இரட்டைக்குவளை; வேங்கைவயலில் என்ன நடக்கிறது?

தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல்… இந்த வரிகளை நம்முடைய பாடப் புத்தகங்களில் பலரும் படித்திருக்கக் கூடும். ஆனால் அவை ஏட்டில் மட்டும் தான் இருக்கிறதா? இன்னும் முழுமையாக அமலாகவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் நடந்த விஷயம் அப்படித்தான் பார்க்க வைக்கிறது. யாராவது குடிக்கும் நீரில் மனிதக் கழிவுகளை கலப்பார்களா? எப்படி மனம் வந்தது அந்த மனித மிருகங்களுக்கு? சாதிய மனப்பான்மை அவ்வளவு கொடூரமானதா? என்று சமூக ஆர்வலர்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

சா’தீ’ய உச்சம்

வேங்கைவயல் கிராமத்தில் நிலவி வந்த சாதிய பாகுபாட்டின் உச்சமாக தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகளை சிலர் கலந்துள்ளனர். இதனை அருந்திய குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

குடிக்கும் நீரில் தான் பிரச்சினை என்று மருத்துவர்கள் கூற, உடனே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் குடிநீரில் மலம் கலந்த விஷயம் தெரியவந்தது. அதிர்ந்து போய்விட்டனர்.

அடுக்கடுக்கான கொடுமைகள்

உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே முதல் ஆட்சியர் கவிதா ராமு வரை பலருக்கும் புகார்கள் சென்றதும் அனைவரும் வரிசையாக வந்திறங்கினர். இவர்கள் வந்த பிறகு தான், அந்த கிராம மக்களுக்கு இழைக்கப்பட்ட அடுக்கடுக்கான கொடுமைகள் குறித்து உலகிற்கு தெரியவந்துள்ளது. இறையூரில் உள்ள அய்யனார் கோயிலில் வழிபட அப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல தலைமுறைகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது.

சாமி ஆடிய பூசாரி மனைவி

இதைக் கேட்டதும் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்து கொண்டு கோயிலுக்குள் சென்று அனைவரையும் வழிபட வைத்தார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. அப்போது கோயில் பூசாரியான ராஜன் என்பவரின் மனைவி சிங்கம்மாளுக்கு திடீரென சாமி வந்துவிட்டது. அதுவும், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசியும், கோயிலுக்குள் செல்லக் கூடாது என்றும் சாமி ஆடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

கடவுள் கூட சாதி பார்க்கிறாரா? என எண்ண வைத்துவிட்டது அந்த சம்பவம். உடனே சிங்கம்மாள் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பரிந்துரை செய்தார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் சிங்கம்மாள் மற்றும் அஞ்சப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்தது.

இரட்டை குவளை முறை

அடுத்த சில நிமிடங்களில் சிங்கம்மாள் கைது செய்யப்பட்டார். சாமி ஆடியதற்கு நான் என்ன செய்வேன் என சிங்கம்மாள் கேட்க, அப்படியே அழைத்து கொண்டு போலீசார் காவல்நிலையம் சென்றுவிட்டனர். அதுமட்டுமின்றி இறையூர் கிராமத்தில் தேநீர் கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதாக புகார் வந்தது. நேரில் சென்று ஆய்வு செய்ததில் இரட்டை குவளை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

அடுத்தடுத்து பாயும் வழக்குகள்

உடனே அந்த கடையின் உரிமையாளர்கள் மூக்கையா, மீனாட்சி தம்பதியை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் இன்னும் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறதோ, அவர்களை அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.