தென்காசி: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவியில் மூன்றாவது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. பழைய குற்றால அருவி ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய மூன்று பிரதான அறிவிகளிலும் நேற்று வரை இரண்டு தினங்களாக பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததை அடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுகிறது. எனவே மெயின் அருவியில் மட்டும் மூன்றாவது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. இதனால் மெயின் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் திரும்பி சென்றனர்.