மதுரை: “அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தமிழ்நாடு ஓட்டலில் நடந்த திமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது?” என்று அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி கோஷமிட்டதால் மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் கடும் வாக்குவாதமும், கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் அதிமுக கவுன்சிலர்கள்: “கடந்த 25ம் தேதி தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தலைமையில் நடந்த திமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் எதற்காக நடந்தது? உள்கட்சி பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதற்காக நடந்த அந்தக் கூட்டத்திற்கு எதற்காக மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி பொறியாளர் அழைக்கப்பட்டனர், அந்தக் கூட்டத்தில் நடந்தது என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு திமுக கவுன்சிலர் ஜெயராமன் மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள் எழுந்து, “எங்க கட்சி அமைச்சரை சந்திக்க எங்கள் கட்சி கவுன்சிலர்கள் சென்றோம், அதை கேட்க உங்களுக்கு உரிமையில்லை, அங்க என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு கட்சி கவுன்சிலர்களும் கோஷ மிட்டபடி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அதன்பின், மேயர் இந்திராணி தலையீட்டு, மக்கள் கோரிக்கைகள், வார்டு பிரச்சினைகள் ஏராளம் இருக்கிறது அதைப் பற்றி பேசலாமே என்றார். அதன்பின் நடந்த விவாதம் வருமாறு:
மண்டலத் தலைவர் வாசுகி: “1-வது மண்டலத்தில் உள்ள 21 வார்டுகளில் 14 வார்டுகளில் பாதாள சாக்கடைப் பணி நடக்கிறது. மேற்பார்வையாளர்கள் பற்றாகுறையால் இப்பணி மேற்பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கிறது. அதனால், பழைய குடிநீர் குழாய், புதிதாக போட்ட குடிநீர் குழாயை தொழிலாளர்கள் உடைத்து விடுகிறார்கள். அதை அவர்களால் உடனடியாக பழுதுப் பார்க்கவும் முடியவில்லை. போதுமான மேற்பார்வையாளர்கள் நியமிக்க வேண்டும்.”
மண்டலத் தலைவர் சரவண புவனேஷ்வரி: “2-வது மண்டலத் திற்குட்பட்ட வார்டுகளில் சொத்து வரி பாக்கி அதிகமாக உள்ளது. சொத்துவரியை கவுன்சிலர்கள் வசூல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பில் கலெக்டர்கள் புதிதாக கட்டங்களை அளிக்க போனோம், வரி நிர்ணயம் செய்ய போனோம் என்று காரணம் சொல்கிறார்கள். புதிய கட்டிடங்களை அளக்க செல்ல ஆர்வம், பழைய வரிபாக்கியை வசூல் செய்வதில் அவர்களுக்கு இல்லை. மாட்டுத் தாவணி சாலையில் 50 “ஜீரோ” பட்ஜெட் கடைகள் கட்டியுள்ளனர்.
50 கடைகள் கட்டி முடித்ததும் ஒரே நாளில் பயனாளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால், இதுவரை 10 கடைகளை மட்டுமே திறந்துள்ளனர். மற்ற கடைகள் பூட்டியே கிடக்கிறது. இந்த கடைகளுக்கு ரூ.13,325 வாடகை நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால், இந்த வாடகையை கடைகாரர்களிடம் பெறுவதற்கு மாநகராட்சி டிமாண்ட் வழங்கவில்லை. அதனால், கடந்த ஜனவரி முதல் வாடகையே இல்லாமல் இந்த கடைகள் செயல்பட தொடங்கி உள்ளது. மாநகராட்சி நிதி நெருக்கடியில் இருப்பதாக சொல்கிறார்கள். வருமானம் வரக்கூடிய இதுபோன்ற கடைகளை வாடகைகளை அதிகாரிகள் விட்டுப்பிடிக்க காரணம் என்ன?”
மதிமுக எம்எல்ஏ பூமிநாதன்: “குடிநீர் குழாய் பதிக்க, பாதாள சாக்கடைப்பணிக்காக குழி தோண்டிப் போட்டுவிட்டு செல்கின்றனர். மாதக் கணக்கில் பணி நடக்காமல் குழியும் மூடப்படாமல் உள்ளது. குழி தோண்டினால் உடனடியாக பணிகளை நடக்க மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.”
திமுக கவுன்சிலர் ஜெயராமன்: “கரிமேடு போலீஸ் நிலையம் மாநகராட்சி கட்டிடத்தில் செயல்படுகிறது. தற்போது இந்த போலீஸ் நிலையம், மாநகராட்சிக்கு ரூ.56 லட்சம் வாடகை பாக்கி உள்ளது. அதை வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிற்கு ரூ.300 கோடி மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளார்கள். முதல்வருக்கு
முக ஸ்டாலினுக்கும், நேருவுக்கும் நன்றி. மதுரை மாட்டுத் தாவணி அருகில் டைட்டில் பார்க் அமைய இருக்கிறது.
ஏற்கெனவே மாட்டுத் தாவணியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் டைட்டல் பார்க் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மாநகராட்சியில் ஒவ்வொரு அதிகாரியும் நான்கு பதவிகளை வைத்துள்ளனர். அதனால், அதிகாரிகளுக்கு பொறுப்புகள் அதிகரித்து எந்த பணியும் நடக்கவில்லை. பழைய சென்டரல் மார்க்கெட் பல்லடுக்கு வாகன காப்பகத்தில் முறைகேடுகளை தடுக்க கம்பியூட்டர் பில் ஆக்க வேண்டும். ராஜாஜி மருத்துவமனை எதிர்புறத்தில் நடைபாதையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் வசூலிக்கிறார்கள். இது சட்டத்திற்கு புறம்பானது. காவல் துறையில் புகார் சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.