கொரோனா பரவல்: மோடி போட்ட உத்தரவு – ஆக்‌ஷனில் இறங்கிய அமைச்சர்!

உலகின் ஏதோ ஒரு மூலையில் பரவும் நோய் நம்மை எப்படி பாதிக்கும் என்ற கேள்வி கொரோனாவுக்கு முன்னர் கேட்கப்பட்டிருக்கலாம். பூமிப் பந்து மிகச் சிறியது எந்த பக்கம் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் குறுகிய காலத்தில் அதன் தாக்கம் அனைத்து பகுதிகளிலும் உணரலாம் என்பதை கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது.

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா இந்திய, தமிழக சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க எச்சரித்துள்ளது. அதிக மக்கள் நெருக்கம் உள்ள நாடான இந்தியாவில் புதிய வகை கொரோனா மிக வேகமாக பரவ வாய்ப்புள்ளதால் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. டிசம்பர் 24ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி டிசம்பர் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பி.எப்.7 ரக கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனைமுறை நடத்தப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து விமானம் மூலம் இலங்கை வழியாக மதுரை வந்த பிரதிபா (39) மற்றும் அவரது 6 வயது மகள் பிரித்தியங்கார ரிகா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை வந்து ஏர் லங்கா விமானம் மூலம் மதுரை திரும்பியுள்ளனர். இருவருக்கும் எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால் அவர்களை பரிசோதித்ததில் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் ஏற்படாமல் தடுக்க, ஒரு வேளை பாதிப்பு ஏற்பட்டால் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரம்மாண்ட மருத்துவ ஒத்திகை நடைபெற்றது. டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் கொரோனா பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் அது அதிகரிக்க கூடும் என்பதால் ஒட்டு மொத்த கொரோனா தடுப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பது அவசியம்” என்று கூறினார்.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 4 நாட்களில் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள் மூலம் வருகை புரிந்த பயணிகளில் ரேண்டமாக 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.