கொல்கத்தா: கொல்கத்தாவில் நாளை மறுநாள் தேசிய கங்கா கவுன்சில் கூட்டம் நடைபெறுவதால், பிரதமர் மோடியை 5 மாநில முதல்வர்கள் சந்திக்கின்றனர். தேசிய கங்கா கவுன்சிலின் தலைவர் பிரதமர், அதன் பிரதிநிதிகள் மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் ஆவர்.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி கான்பூரில் தேசிய கங்கா கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் இரண்டாவது முறையாக வரும் 30ம் தேதி (நாளை மறுநாள்) கொல்கத்தாவில் தேசிய கங்கா கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. அன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேற்கண்ட மாநில முதல்வர்களும் பங்கேற்கின்றனர்.
அப்போது, தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் (என்.எம்.சி.ஜி) குறித்த விரிவான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். அன்றைய கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
மேலும், ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடிநீர் அமைச்சகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், கப்பல் துறை அமைச்சகம், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகம், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.