மதுரை: இலங்கையில் இருந்து தனியார் விமானம் 70 பயணிகளுடன் நேற்று காலை 9.40 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தது. அதில் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த பயணியிடம் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 39 வயதான பெண், அவரது 6 வயது மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து, இவர்களது சொந்த ஊரான விருதுநகருக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது, விருதுநகர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் தங்கியுள்ள இருவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
பெண்ணின் கணவர், சீனாவில் வேலை பார்த்துள்ளார். அவர் ஜெர்மனி செல்லவே உடன் தங்கியிருந்த இருவரும் தமிழகம் திரும்பிய நிலையில்தான், கொரானா தொற்று உறுதியாகி, மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து இலங்கை விமானத்தில் வந்த அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதுடன், இவர்கள் பட்டியல் பெறப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரைக்கு வந்த தாய், மகள் இருவருக்கும் புதிய வகை பிஎப் 7 கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக என்பது பரிசோதனை முடிவுக்குப் பிறகே தெரிய வரும்.