சீனாவில் என்ன தான் நடக்கிறது? 8ஆம் தேதி முதல்.. விஷப் பரீட்சை!

சீனாவில் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகள் முழுவதும் கொரோனா உலகையே தலைகீழாக புரட்டிப் போட்டது. 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் மூன்றாவது அலையின் பாதிப்பு இருந்தது.

உடல் நலம் பாதிக்கப்படுதல், உயிரிழப்புகள், ஒரு பக்கம் என்றால் பொருளாதார பாதிப்பு மிக அதிகளவில் இருந்தது. கொரோனாவாலும் அதன் காரணமாக போடப்பட்ட பொது முடக்கத்தாலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அதிலிருந்து தற்போது மெல்ல மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் சீனாவில் பிஎப்7 வகை கொரோனா அதிவேகமாக பரவி வருவதாகவும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படுவதாகவும் அதிர்ச்சி செய்திகள் வந்து கொண்டுள்ளன.

ஆனால் சீன அரசோ கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறித்து எண்ணிக்கையை மிகவும் குறைத்து சொல்வதாக கூறப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், கொரோனா வைரஸ் தொற்றின் தினசரி பாதிப்புகளை வெளியிடப் போவதில்லை என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆ.ராசாவுக்கு பாஜக செக்: நீலகிரியில் எல்.முருகன் டஃப் கொடுப்பாரா?

சீனாவின் ஷாங்காய் அருகில் உள்ள மிகப்பெரிய தொழில் நகரமான ஜெஜியாங் பகுதியில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பாதிப்பு பதிவாகும் என்றும் இதன் விளைவாக தினமும் அங்கு 5,000 பேர் வரை மரணம் அடையக்கூடும் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. இந்த கணிப்புப்படி நிகழந்தால், அது இதுநாள்வரை சீனா சந்தித்திராத அதிபயங்கர கொரோனா மரணங்களாக இருக்கும்.

ஆனால் சீன அரசோ கட்டுப்பாடுகளை அதிகரிக்காமல் தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஜனவரி 8-ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை ரத்து செய்யப்போவதாகவும், சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாகவும் சீன அரசு அறிவித்து உள்ளது.

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அரசுவிடுதிகளில் 2 வாரம் கட்டாயமாகத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருந்தது. இதுபடிப்படியாக 3 நாள்கள் கண்காணிப்புடன் ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டது.

திருக்குற்றாலநாத சுவாமி கோயில்: திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்!

தற்போது கொரோனா அதிகமானதால் பல்வேறு செயல்பாடுகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச எல்லைகளை மீண்டும் திறந்து, தனிமைப்படுத்துதலையும் ரத்துசெய்யப்போவதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 8ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரப் போவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.